Friday 24 August 2012

Tamilcinema -123 -திரை விமர்சனம்





வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்



சாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது கடைக்கு பக்கத்து அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஜோதியை ஒருதலையாக காதலிக்கிறான்.

அந்த அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் வேலைக்கு செல்லும் அப்பா, அம்மா. அவர்களது ஒரே மகள் ஆர்த்தி. அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவன் தினேஷ், ஆர்த்தியின் அழகில் மயங்கி, அவளுக்கு காதல் வலை விரிக்கிறான். இவன் பெண்களை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து ரசிக்கும் வக்கிரபுத்தி கொண்டவன். இது தெரியாமல் தினேஷ் விரித்த வலையில் சிக்குகிறாள் ஆர்த்தி.
தினேஷ் அவளையும் ஆபாசமாக படம் பிடித்து நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து ஆனந்தமடைகிறான். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக அவனுடைய செல்போனை பார்க்க நேர்ந்த ஆர்த்தி, அதில் தன்னுடைய ஆபாச படம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இதனால் அவனது செல்போனின் மெமரி கார்டை எடுத்து வந்து, அதை வைத்து அவனை போலீசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறாள்.
இதை அறிந்த தினேஷ் ஆத்திரமடைகிறான். தான் மாட்டிக் கொள்வோமா என்ற பயத்தில் அவள் முகத்தில் ஆசிட் வீச எண்ணுகிறான். ஆர்த்தி என நினைத்து ஜோதி மீது ஆசிட் வீசிவிட்டு ஓடி விடுகிறான்.
ஜோதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தினேஷ்தான் குற்றவாளி என தெரிந்திருந்தும், அவனது அம்மா அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால் அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, விசாரணைக்கு அழைத்து வந்த ஹீரோ வேலுவை குற்றவாளியாக்க முயல்கிறார். ‘பணத்தை வாங்கிக் கொண்டு குற்றத்தை ஒப்புக்கொள்’ என வேலுவை மிரட்டுகிறார்.
இறுதியில், தான் ஒருதலையாக காதலிக்கும் ஜோதியின் சிகிச்சைக்காக பணத்தை பெற்றுக்கொண்டு, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கூறிவிட்டு, வேலு சிறைக்கு செல்கிறான். ஆனால் வேலுவின் கடையில் வேலை செய்த சிறுவன் மூலம் பணம் இன்னும் அவளுக்கு செல்லவில்லை என்றும் அதனால் அவளுக்கு சிகிச்சை நடக்கவில்லை என்பதை அறிந்தும் வருந்துகிறான்.
இறுதியில் வேலுவின் காதல் என்ன ஆனது? குற்றம் செய்த தினேஷ் தண்டிக்கப்பட்டாரா? துரோகம் செய்த இன்ஸ்பெக்டர் என்ன ஆனார்? என்பதே க்ளைமாக்ஸ்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தை ஏற்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த ‘காதல்’ படத்தையடுத்து, மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்.
படம் பார்த்துவிட்டு வெளிவரும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீரை பார்க்க முடிகிறது. அந்தளவிற்கு மனதை உருக்கும் காட்சியமைப்புகளை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.
வேலுவாக வரும் ஸ்ரீ, பிளாட்பார பையனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்ஸ்பெக்டரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறும் இடத்தில் அவர்மேல் பரிதாபப்பட வைக்கிறது.
வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா தனது கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருக்கு படத்தில் வசனங்கள் அதிகமாக இல்லை. ஆனால், கண்களாலே நிறைய வசனங்கள் பேசியிருக்கிறார்.
தினேஷாக வரும் மிதுன் முரளி பளபள என்று பணக்காரத்தனத்துடன் ஒன்றியிருக்கிறார். இவரது வக்கிர நடிப்பு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
ஆர்த்தி கதாபாத்திரத்தில் வரும் அழகான ராட்சசியாக மனீஷா யாதவ். இவர் தினேஷிடமிருந்து மெமரி கார்டை எடுக்க இருக்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து பயம் கொள்ள வைக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் யதார்த்தம். இப்போதிருக்கும் சில மோசமான இன்ஸ்பெக்டர்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.
படத்தின் முற்பாதி ஆங்காங்கே தொய்வைக் கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை படத்தோடு ஒன்றவைத்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.
விஜய் மில்டனின் புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்பதிவும், பிரசன்னாவின் உயிரோட்டமான பின்னணி இசையும், கோபி கிருஷ்ணாவின் நேர்த்தியான படத்தொகுப்பும் ஒரு பரபரப்பான வழக்கை கண் முன்னே பார்த்த திருப்தியைத் தருகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் செல்போனின் நவீன தொழில்நுட்பத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, இப்படத்தின் மூலம் சமூகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் பாலாஜி சக்திவேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மொத்தத்தில் வழக்கு எண் 18/9 ரசிகர்களைக் கவரும் வழக்காகும்.