வழக்கு எண் :18/9 - கேபிள் சங்கர்- MAY 5, 2012
சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்.
தினமும் தினசரிகளில் பார்க்கும் செய்திதான் படத்தின் கதை. செய்தியாய் பாதிக்காத அக்கதை படமாய் விரியும் போது பகீரென்கிறது. முகத்தில் ஆசிட் ஊத்தப்பட்டு ரணகளமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் வேலைக்கார பெண்ணிடமிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதே ஏரியாவில் ப்ளாட்பாரக்கடையில் வேலைப் பார்க்கும் வேலுவின் மீது அப்பெண்ணின் அம்மா சந்தேகப்பட, அவனைக் கூட்டி வந்து விசாரணை செய்கிறார்கள். இது ஒரு எபிசோட். இன்னொரு எபிசோட் அந்த பெண் வேலைப் பார்க்கும் வீட்டில் உள்ள பெண் தன்னுடன் ப்ளிரிட் செய்தவனும், ஆபாச வீடியோ எடுத்தவனுமான மேல் வீட்டுப் பையன் தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள். இரண்டையும் விசாரித்த போலீஸ் என்ன செய்தது? கோர்ட்டுக்கு போகும் வழக்கு எண் 18/9ன் தீர்ப்பு என்ன என்பதுதான் கதை.
ஸ்ரீ எனும் புதுமுகம் தான் ப்ளாட்பாரக்கடை இளைஞன். சட்டென நாம் எங்காவது பார்த்த முகம் போல ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓரிரு இடங்களில் அபரிமிதமான அழுகையும், அப்பாவித்தனைத்தையும் தவிர பாராட்டக் கூடிய நடிப்பு. அவரின் நண்பனாய் வரும் கூத்து கலை சிறுவனின் நடிப்பும், அவ்வப்போது கொடுக்கும் பஞ்ச்சுகளும் அட்டகாசம். மிக சீரியஸாய் போகும் படத்தில் கொஞ்சமே கொஞ்ச நேரம் ரிலாக்சேஷன்.
கதாநாயகிகளாய் வலம் வரும் வேலைக்காரப் பெண் ஊர்மிளாவின் முகமும், அவருடய காஸ்ட்யூமும் அவ்வளவு இயல்பு. ஊர்மிளா வேலை செய்யும் வீட்டுக்கார பெண் மஹிமாவின் நடிப்பு ஓகே. மேல் வீட்டுப் பையனின் நடவடிக்கைகளைப் பார்த்து மயங்கிப் போய் என்ன செய்வது என்று புரியாமல் அவனுடன் ஈ.சி.ஆர்.போய் வரும் காட்சியிலும், தோழிகளுடன் அவனைப் பற்றி பேசும் காட்சியிலும் ஈர்க்கிறார்.
இன்ஸ்பெக்டர் குமரவேல். படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் படு யாதார்த்தமான நடிப்பு. மனுஷன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு இயல்பு. அவரது பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே படு சிறப்பு.
கேனான் 5டியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன். இப்படத்திற்கு இந்த டெக்னாலஜி படு பாந்தமாய் பொருந்துகிறது. கிட்டத்தட்ட நம் பக்கத்து வீட்டில் நடப்பதை கூடவே இருந்து பார்ப்பது போன்றதொரு விஷுவல்கள். வாழ்த்துக்கள் விஜய். ப்ரசன்னாவின் பின்னணியிசை ஓகே. அந்த வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பாடல் மனதை தொடவில்லை.
ஆரம்பக் காட்சிகளில் வரும் விபச்சாரப் பெண், அவளது தோழி, ப்ளாட்பாரக்கடை ஓனர், வேலைக்காரப் பெண்ணின் அம்மா, பணக்காரப் பெண்ணின் தோழிகள், அவளுடய அம்மா, அப்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர், முகம் காட்டாத அமைச்சர், என்று குட்டிக் குட்டிக் கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். பல இடங்களில் வசனங்கள் கேரக்டர்கள் பேசுவதை விட வாய்ஸ் ஓவரில் சொல்லும் விஷயங்கள் சூப்பர். உதாரணமாய் இரண்டு விபச்சாரிகளும், பேசிக் கொண்டே நடக்க, அவர்களது பேச்சு எந்த ஏரியாவில் அவர்கள் இன்று நிற்க போவது என்றும் சாந்தி தியேட்டர் சப்வே என்று சொல்வது, இப்படி பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறது வசனங்கள். இன்றைய இளம்பெண்களின் ஆட்டிட்டியூடை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தியிருப்பது சூப்பர். பல இடங்களில் ஹீரோயின்களை விட அவளது தோழிகள் செம அழகாய் இருக்கிறார்கள்.இரண்டு தனித்தனி எபிசோடுகளாய் இருந்தாலும் அதை இணைக்கும் காட்சிகளை வைத்திருக்கும் இடங்கள் அருமை.
படம் நெடுக ப்ள்ஸ்களே நிறைய இருந்தாலும் ஆரம்பக் காட்சியில் தெரியும் லேசான டாக்குமெண்டரித்தனமும், க்ளைமாக்ஸில் வேலைக்கார ஹீரோயின் எடுக்கும் முடிவுக்கான தைரியத்தை எங்கிருந்து பெற்றாள்? ஹீரோவின் ப்ரெண்டு சொன்னதால் உடனே நம்பிவிடுவாளா? எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தமிழ் சினிமா சந்தோஷமாய், தைரியமாய், திமிருடன் காலரை தூக்கிக் கொண்டு திரிய வைத்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு நன்றிகள் பல. இம்மாதிரியான படங்கள் நன்றாக ஓடினால்தான் நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும்.
வழக்கு எண்:18/9 – அருமை… அருமை.. அருமைய்யா
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
No comments:
Post a Comment