Wednesday, 27 June 2012

உலகத்தரத்தில் ஒரு சினிமா! - வழக்கு எண் 18/9 - Nakeeran

உலகத்தரத்தில் ஒரு சினிமா! - வழக்கு எண் 18/9  - Nakeeran 

    ’அவன் தலை விதி.. அப்படி இருக்கான்.. நல்ல காலம்.. அப்படி ஒரு மோசமான நெலமையில நாம இல்ல..’ அழுக்கு மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் உச்சாணிக் கொம்பில் நின்று ‘உச்’ கொட்டிவிட்டு,  மனிதநேயர்களாக தங்களை பாவித்துக் கொள்பவர்கள் உண்டு. இந்த விளிம்பு மனிதர்களைப் பார்ப்பதே அருவருப்பானது என்று முகம் சுளிப்பவர்களும் உண்டு.   

 

‘நீ யாராகவும் இருந்துவிட்டுப் போ..  உங்களில் பலரும் வெறுக்கின்ற அந்த அழுக்கு மேடையில்தான் வழக்கு எண் 18/9-ன் கதாபாத்திரங்களை உருளவிட்டிருக்கிறேன்..’ என்று படு யதார்த்தமாக உலகத்தரத்தில் ஒரு சினிமாவைத் தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

கறை படிந்த பற்களும் பரட்டைத் தலையுமாய் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறான் கதாநாயகன் (ஸ்ரீ). ஆம்பள சட்டைய போட்டுக்கிட்டு, வேலைக்காரி பெத்த வேலைக்காரியாக வீட்டைப் பெருக்குவதும், துடைப்பதும், துணி துவைப்பதும், காயப் போடுவதுமாகவே இருக்கிறாள் கதாநாயகி (ஊர்மிளா மஹந்தா). கதாநாயகியை 

நன்றாக வேலை(வீட்டு வேலைக்காரி) வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்பார்களே, இந்தப் படத்துக்கு அது சாலப் பொருந்தும். ஒரு பிளாட்பார தள்ளு வண்டி சாப்பாட்டுக் கடையைச் சுற்றியே பயணிக்கின்ற கதையில் ஒரு திருப்பமாக மேட்டுக்குடி மக்கள் தலை காட்டும் போது ‘அட, வழக்கமான சினிமா மாதிரி தெரியுதே..’ என்ற எண்ணம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், இரண்டுவிதமான உலகத்தையும் வெகு லாவகமாக இணைக்கிறது வலுவான திரைக்கதை. 

கதை இதுதான் –  பெற்றோர் பட்ட கடனுக்காக சிறு வயதில் வடநாட்டு முறுக்கு கம்பெனியில் வதைபடும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் அந்தப் பெற்றோரையும் இழந்து விட்டு,  சென்னைப் பட்டண வீதியில் விழுந்து கிடக்கிறான்.   பாலியல் தொழிலாளி என்றாலும் ரோஸி மட்டுமே அவனுக்காக மனம் கசிகிறாள். பிளாட்பாரக் கடையில் கிடைத்த வேலையே அவனுக்கு பெரிதாகப் படுகிறது. 

பிழைப்புக்காக பட்டணம் வந்த சிறுவன் (சின்னச்சாமி)  கிராமத்தில் தான் கற்றறிந்த கூத்துக்கலையை கதாநாயகன் முன் அபாரமாக வெளிப்படுத்துகிறான். அச்சிறுவனின் தோழமை அவனுக்கு நம்பிக்கையூட்டுகிறது.  சாலையில் அடிக்கடி தன்னைக் கடந்து போகும் கதாநாயகியின் கன்னக் குழி முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதுவரை கண்டிராத காதல் பரவசத்தில் திளைக்கிறான். 


ஒரு தலையாய் இவன் காதல் பயணிக்க... ப்ளஸ் டூ படிக்கின்ற இன்னொரு ஹீரோ-கம்-வில்லன் (மிதுன் முரளி)  என்ட்ரி ஆகிறான். வக்கிரத்தோடு சக மாணவி (மனிஷா யாதவ்) பின்னால் அலைகிறான்.  எதை எதையோ பார்த்து தொலைக்கிறான்.  தறிகெட்ட அவனது இளமை வெறிதான் ஒரு கொடூரத்தை நிகழ்த்திவிட்டு, வழக்கு எண் 18/9 ஆக பதிவாகிறது.  நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து ஒரு உன்னத மனுஷியின் தீர்ப்புமாக கதை நிறைவடைகிறது. 

“நான் குணமாகணும்னு நீ ஜெயிலுக்குப் போறது உன்னோட காதல்ன்னா.. நான் ஜெயிலுக்குப் போயி உனக்கு விடுதலை கிடைக்கச் செய்யறதுதான் என்னோட காதல்..” என்று காதலுக்காக தங்களை வருத்திக் கொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். புதுமுகங்களை அந்தந்த காதாபாத்திரங்களாகவே வாழ வைத்திருக்கிறார் இயக்குனர். 

அதுவும் அந்த இன்ஸ்பெக்டர் ரோலை அத்தனை பாந்தமாக செய்திருக்கிறார் முத்துராமன். கோர்ட் வளாகத்தில் கதாநாயகி முத்துராமன் முகத்தில் ஆசிட் அடிக்கும் போது எழுகின்ற கரவொலி அந்தக் காட்சிக்கானது என்றாலும்,  முத்துராமனின் தேர்ந்த நடிப்புக்காக 

விழுந்த கைதட்டலாகவே கருதிக் கொள்ளலாம்.   தெருமுனையில் நின்று கேட்பது போல வசனம் அத்தனை இயல்பாக இருக்கிறது. ஸ்டில் கேமராவில் எடுத்த படமாம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனை பாராட்டாமல் இருக்க முடியாது. 

பள்ளி மாணவி ரோலில் வரும் மனிஷா அந்த பாத்திரத்துக்கு அத்தனை பொருந்தியிருக்கிறார். படம் நெடுகிலும் காட்சிகளில் வறட்சியை மட்டுமே கண்டு வறண்டு போய் இருக்கும் ஆடியன்ஸுக்கு பாலைவனச் சோலையாகத் தெரிகிறாள். ‘வேலு (ஸ்ரீ) பாவம்மா.. நீயாச்சும் (ஊர்மிளா) அவனைக் காதலிச்சு அவன் வாழ்க்கையில சந்தோஷத்த ஏற்படுத்தணும்..’ என்று மனசுக்குள் ஆடியன்ஸே ரெகமண்ட் பண்ணுகிற அளவுக்கு ஹீரோ அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறான்.    

37 வருடங்களுக்கு முன் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதையில் மகளின் காதலனுடன் சல்லாபித்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் படாபட் ஜெயலட்சுமியின் அம்மா கேரக்டரில் நடித்தவரின் முகச்சாயல் அப்படியே இருக்கிறது ஹீரோயின் ஊர்மிளாவுக்கு. ஆசிட் வீச்சில் வெந்து கருகிய ஜோதியின் (ஊர்மிளா)  முகத்தை கடைசி வரை காட்டாமலே இருந்திருக்கலாம். கொடூரத்தைக் காட்டி க்ளைமாக்ஸில் பதற வைக்க வேண்டும் என்றோ,  நாயகனின் காதல் தீவிரம் வெளிப்பட வேண்டும் என்றோ, ஏதோ ஒருவிதத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு க்ளோஸ்-அப்பில் அந்த முகத்தைக் காட்டுகிறார் டைரக்டர்.  இது போன்ற குறைகளும் உண்டு. 

சுடுகின்ற நிஜம் என்பதாலோ என்னவோ, பாலியல் உணர்வு தலை விரித்து ஆடுகின்ற மனிஷா - மிதுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களையும் சுட்டுப் பொசுக்கி நெளிய வைக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் “டேய்.. இனிமே எம்புள்ளய தனியா ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்டா..” என்று பாமரத்தனமாக கத்தியபோது தியேட்டரே அலறியது. 

படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சீன் இப்படி ஒரு தாக்கத்தை உண்டுபண்ணி விடுகிறது.   ‘எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு.. ஆமா.. எங்க வீட்டுலயும் ஒரு பையன் இருக்கான்.. அய்யோ.. இவங்களயெல்லாம் நாம கவனிக்கிறதேயில்லையே..’ என்னும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன படு இயல்பாக செதுக்கப்பட்டிருக்கும் மனிஷா – மிதுன் கதாபாத்திரங்கள்.  
   
காட்சி முடிந்து வெளியேறும் போது “ஒரே பாட்ட திருப்பித் திருப்பிப் போட்டு படத்த முடிச்சிட்டான்டா..” என்று சராசரி ரசிகன் கமெண்ட் அடித்தாலும், ’ஒரு குரல் கேட்குது பெண்ணே..” என்ற பாடல் நெஞ்சில் பதிந்து விடுகிறது. காட்சிக்கு ஏற்ப பிசிறில்லாமல் ஒலிக்கிறது பிரசன்னாவின் பின்னணி இசை. 


நெஞ்சு கனத்து, தொண்டை வறண்டு, குமுறி அழுதால் மன பாரம் கொஞ்சம் குறையுமே என்ற நிலை வரும் போதெல்லாம் -  ஒரு சினிமாவைப் பார்த்து கோழை போல் அழுவதா என்று அடக்கிக் கொள்பவர்களை -  அவர்களையும் அறியாமல் குபுக்கென்று கண்ணீரைக் கொப்பளிக்க வைக்கின்ற உயிரோட்டமான காட்சிகள் படத்தில் உண்டு.

ஒரு படைப்பாளிக்கு ரசிகர்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகளைக் காட்டிலும் சிறந்த காணிக்கை எதுவாக இருக்க முடியும்? தமிழில் இப்படி ஒரு அபூர்வ சினிமாவைத் தந்து, தரமான ரசிகர்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

நல்ல சினிமா.. மிக நல்ல சினிமா.. சூப்பர் டூப்பர் மூவி..  என்றெல்லாம் எத்தனையோ படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். இந்தப் படத்தை அந்த வரிசையிலெல்லாம் சேர்த்து விட முடியாது. ஆம்.. வழக்கு எண் 18/9 அதற்கெல்லாம் மேல்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment