Wednesday 27 June 2012

cinema.vikatan - தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்.


மிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்.

வழக்கு எண் 18/9

மிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்... இந்த 'வழக்கு’!
 எளிய மனிதர்களின் பிரியங்களை  அதிகாரமும் வக்கிரமும் எப்படிக் குதறிப் போடுகின்றன என்பதை அத்தனை அசலாக ஆகச் சிறந்த செய்நேர்த்தியுடன்  நேர்மையாகச் சொல்லிய விதத்தில்... பாலாஜி சக்திவேல், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் தடம் பதிக்கிறார்!
முழுக்க முழுக்க அறிமுகங்கள்... புதுமுகங்கள்... அதுதான் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.  
ஒரு அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிடுகிற வழக்கின் விசாரணையில் தொடங்குகிறது கதை. போலீஸ்       விசாரணையில் ஊர்மிளாவோடு தகராறு பண்ணும் பிளாட்ஃபார இட்லிக் கடைப் பையன் ஸ்ரீ சிக்குகிறான். ஊர்மிளாவை ஒருதலையாகக் காதலித்த ஸ்ரீ மீது சந்தேகம் பாயும்போதே, உண்மையான குற்றவாளி, அதே அபார்ட்மென் டைச் சேர்ந்த பணக்கார பையன் மிதுன் முரளிதான் என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியவருகிறது. மிதுன் முரளியின் அம்மா, மந்திரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. கடைசியில் இன்ஸ்பெக்டரின் நயவஞ்சகத் தால் ஸ்ரீ குற்றவாளியாக்கப்படுகிறான். இதற்குப் பதிலடியாக ஊர்மிளா என்ன செய்தாள் என்பது உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ்!
மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். மொபைல் போன், இணையம் போன்ற அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும்போது பள்ளி மாணவர்கள் வரை எவ்வளவு சீரழிவு வரும் என்பதையும் சொல்லும் இந்தப் படம்... நமக்குப் பாடம். பிடிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கும் மோசமான கலாசாரத்தைப் பற்றிய கதையில், கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமைக் கொடூரம், எளிய மக்களின் அன்பு, பணக்கார சூது, பள்ளி மாணவி களின் பருவ ஈர்ப்புபோன்ற பல விஷயங்களுடன் உண்மைக்கு நெருக்கமாக ஊர்வலம் வருவதில்,  இயக்குநரின் கடும் உழைப்பு தெரிகிறது.
ஒருவன் பசியால் நடைபாதையில் மயங்கிக்கிடக்கும்போது டிஃபன் பாக்ஸோடு கடந்தோடும் கால்கள், அந்த ஜெயலட்சுமி போன்    பேசும்போது பின்னால் சிரிக்கும் நித்யானந்தா போட்டோ, ஊர்மிளாவின் கம்யூனிஸ அப்பாவின் பெயர் பாலன், ப்ளாட் போட விவசாய நிலங்கள் எனப் படம் முழுக்க எவ்வளவு நுணுக்கங்கள்!
இட்லிக் கடைப் பையனாக வரும் ஸ்ரீ அப்பாவி பையன் கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். அத்தனை வருடங்கள் கொத்தடிமையாக இருந்த போதெல்லாம் கோபம் காட்டாமல், பெற்றோர் இறந்த தகவலை மறைத்தது தெரிந்து கொந்தளித்து எழுவது, ரோஸி அக்காவிடம் பரிதாபம்கொள்வது, ஊர்மிளாவைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தில் வெட்கப் பிரகாசம் காட்டுவது என ஸ்ரீ ஆச்சர்ய அறிமுகம். இன்ஸ்பெக் டர் வஞ்சகமாகப் பேச,  குழப்பமும்காதலு மாக அழுது அரற்றிச் சம்மதிக்கும்               அந்தக் காட்சி... மாஸ்டர் பீஸ்!
முழுதாக இரண்டு வரி வசனம்கூட இல்லாமல் 'கண்கள் இரண்டால்’ மட்டுமே படம் முழுக்க பேசுகிறார் ஊர்மிளா மஹந்தா. அதுவும் க்ளைமாக்ஸில் ஸ்ரீயைப் பார்க்கும் அந்த ஒற்றைப் பார்வையிலேயே... காதல், கருணை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலிப்பதில் வெல்டன் ஊர்மிளா!
யாரப்பா அந்த இன்ஸ்பெக்டர் முத்துராமன்? குள்ளநரி போலீஸ் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத் திருக்கிறார்.  'அந்த முறுக்கு கம்பெனிக்காரன் மேல கொதிக்கிற எண்ணெயை நீ  ஊத்தியிருக்கணும்டா...’ என்று ஸ்ரீக்கு ஆதரவாகப்  பேசுவதும், 'நீங்க இனிமே எதுன்னாலும் என்கிட்டயே ஸ்ட்ரைட்டா வந்திருங்க...’ என அயோக்கிய முகம் காட்டுவதுமாக... எந்த உணர்ச்சியும் காட்டாமல் காவாளித்தனம் செய்யும் ஒரு காவல் அதிகாரியின் மனப்போக்கை கச்சிதமாகப் பிரதிபலித்து இருக்கிறார்.
படம் நெடுக நடமாடும் சீரியஸ் மாந்தர்களுக்கு நடுவில் 'யோவ்... யோவ்...’ என்றபடி வரும் சின்னசாமி, பெரிதாகக் கவர்கிறான். கிராமத்துக் கூத்தில் சிறுமியாக வேடமிட்டுப் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று 'மார்பில்’ நோட்டுக் குத்திக்கொள்வதாகட்டும், படம் முழுக்கவே பெண்ணின் மெல்லிய உடல்மொழியுடன், அலட்டல் பந்தாவுடன் வலம் வருவதாகட்டும்... யோவ்... உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குய்யா!
தன்னிடம் 'ஃப்ளெர்ட்’ செய்கிறான் என்று தெரிந்தே தயக்கத்துடன் அதை அனுமதிப்பதிலும், மிதுனின் மொபைலில் வீடியோ பார்த்து அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் காரிலேயே 'காய்ச்சல் காரணம்’ சொல்லி வீட்டுக்குப் பத்திரமாக வந்து இறங்கும் துணிச்சலிலும், மனீஷா யாதவின் உடல்மொழி மெட்ரோ கான் வென்ட்  மாணவியைக் கண்ணில் நிறுத்துகிறது!
காஃபி டே அவுட்டிங், பார்ட்டி டேட்டிங் கலாசாரத்தில் திளைக்கும் அலட்சியமான, வக்கிரமான பணக்கார வீட்டுப் பையனாக மிதுன் முரளி கடுப்பேற்றுவதில்... கச்சிதம்!
'பொறுக்கி... பொறுக்கி’ என ராகம் போட்டுக்கொண்டே இருக்கும் பார்வதி, ரோஸி அக்காவாக வரும் தேவி, வண்டிக் கடைக்க£ரராக வரும் ஜெயபாலு என அத்தனை பேரும் இயல்பான அழகான தேர்வுகள். படம் முழுக்க படு இயல்பான வசீகரமான வசனங்கள் பெரிய பலம். 'அய்யே அந்த தியேட்டர் வேணாம்க்கா... ஒரே கலீஜ்!’ என்று 'தொழில் நிலவரம்’ பேசும் பாலியல் தொழிலாளிகள், 'கருவாடு இருக்குற இடத்துலதான்யா பூனை இருக்கும்’ என்று போலீஸை வைத்தே   கஞ்சா விற்பவனை அடையாளம் காண்பது என்பதெல்லாம் சாம்பிள்கள்! கவர்ச்சியின் எல்லையைத் தொட அனுமதிக்கும் கதையிலும் கவனமாக விலகி நடந்திருப்பது, வசதியான வீட்டுப் பெண் என்பதால் 'கெட்ட பெண்’ணாகக் காட்டாமல் வயதுக்கு உரிய இயல்போடு மனீஷா பாத்திரத்தை வடிவமைத்திருப்பது, 'இனிமே குடிக் காதக்கா. உனக்கு நான் இருக்கேன்க்கா...’ என்று பாசத்துடன் ஸ்ரீ காசு கொடுத்ததும் நெகிழும் ரோஸி பிளாஸ்டிக் கப்பை மிதித்துவிட்டுச் செல்வது, ஊர்மிளாவை கோர்ட் வளாகத்தில் போலீஸார் அடிக்கத் தொடங்க, பெண் வக்கீல்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து நின்று காப்பாற்றுவது எனப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பொதுமக்களின் மீதான அக்கறை தொனிப்பதற்கே... இன்னொரு சபாஷ்!
புகைப்படம் எடுக்கும் கேனான் 5டி டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவில், பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல நெருக்க உணர்வை அள்ளித் தருகிறது விஜய் மில்டனின் கேமரா. கதை மெதுவாக நகரும் நேரங்களில் எல்லாம் விதவிதமான கேன்டிட் ஷாட்கள்தான் படத்தை தூக்கிப் போகின்றன. ஆனால், நடிகர்களின் உடம்போடு கேமராவை இணைக்கும் 'பாடிகேம்’ ஷாட்களில் மட்டும் அங்கங்கே கார்ட்டூன் எஃபெக்ட்!
பாடல்களே இல்லாத இப்படியான ஒரு படத்தில் பின்னணி இசை எவ்வளவு முன்னணி வகித்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங்.  இசையே இல்லாமல் ஒலிக்கும் 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்..’, 'ஒரு குரல் கேட்குது பெண்ணே..’ கவிதைகள் நல்ல ஆறுதல்.
தவறான மனிதர்களின் மீதான பெருங்கோபத்தையும் எளிய இதயங்களின் மேல் பேரன்பையும் கிளறிவிட்டு மனிதத்தைப் பேசும் இந்த வழக்கை, எந்த வாய்தாவும் வாங்காமல் ஆதரிக்க வேண்டியது சினிமா ரசிகர்களின் கடமை... தவறவிடக் கூடாத உரிமையும்கூட!

No comments:

Post a Comment