Thursday 28 June 2012

தினமலர் விமர்சனம் - வழக்கு எண் 18/9

cinema.dinamalar.com -Vazhakku enn 18/9 -


தினமலர் விமர்சனம் » வழக்கு எண் 18/9

 தினமலர் விமர்சனம்:
வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் தான் "வழக்கு எண் 18/9" படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! "காதல்" படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு காதல் படைப்பு மட்டுமல்ல... காதல் - காவல் காவிய படைப்பும் கூட!
கதைப்படி, ரோட்டோர டிபன் கடையில் வேலை பார்க்கும் அநாதை வேலுவுக்கு, அவன் கடையை ஒட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி மீது காதல். ஆனால் இந்த காதல் கசிந்துருவதற்குள், வேறு சில காரணங்களால் ‌வேலு மீது தப்பான அபிப்ராயம் கொண்டு வெறுப்பை உமிழ்கிறார் ஜோதி! இந்நிலையில் ஜோதி வீட்டு வேலை செய்யும் வசதியான வீட்டுப்பெண் ஆர்த்தி மீது அதே ப்ளாட்டில் வசிக்கும் அர்த்தியை விட வசதியான தினேஷூக்கு காதல் போர்வையில் காமம்! அந்த காமமும், காதலும் ஆர்த்தியை, ஆபாசமாக தனது செல்போனில் படமெடுத்து அதை நண்பர்களின் போனில் உலவ செய்து, பெருமை பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் தினேஷூக்கு ஏற்படுகிறது. இது தெரியாமல் தினேஷின் வலையில் விழும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு தினேஷை விட்டு விலக, தன் நோக்கம் நிறைவேறாத வருத்தத்தில் தினேஷ், ஆர்த்திக்கு அடிக்கும் ஆசிட், குறிதவறி ஜோதியின் முகத்தையும், முக்கால்வாசி உடம்பையும் பதம்பார்க்கிறது. 

ஜோதியின் அம்மா உள்ளிட்டவர்களின் கூற்றுபடி ஆசிட் அடித்தது வேலு தான் என விசாரணை கைதியாக பிடித்து வரும் ‌காவல்துறை, காசுக்கு ஆசைப்பட்டு தனது குள்ளநரித்தனத்தால் அவரையே குற்றவாளியாகவும் கோர்ட்டின் முன் நிறுத்துகிறது. இந்த வழக்கில் இருந்து வேலு தப்பித்தாரா...? உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா...? ஜோதியின் மீதான வேலுவின் காதல் என்னாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடையளிக்கிறது வழக்கு எண் 18/9 படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்பான மீதிக்கதை!

வேலுவாக புதுமுகம் ஸ்ரீ, ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடை வேலையாளாகாவே வாழ்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜோதியாக வரும் வீட்டு வேலைப்பெண்ணாக சட்டை, பாவாடையில் கையில் தூக்குவாளி கூடையுடன் வரும் ஊர்மிளாவும் காரமிளையாக கலக்கி எடுத்திருக்கிறார். இவர்களை மாதிரியே தினேஷாக வரும் மிதுன் முரளி, ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ் உள்ளிட்ட புதுமுகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!

மேற்படி இந்த ஜோடிகளைக் காட்டிலும் ஒருபடி மேலாக ஸ்ரீயின் அப்பா-அம்மாவாக ஒரு சில காட்சிகளே வரும் வேடியப்பன் எனும் செந்தில், ராணி, தினேஷ் எனும் மிதுனின் தாயாக மினிஸ்டரின் கீப்பாக வரும் ராதிகா, ஆர்த்தி எனும் மனிஷாவின் தாய் தந்தையாக வரும் கவுதம், வித்யா-ஈஸ்வர், ஊர்மிளா எனும் ஜோதியின் தாயாக வரும் பார்வதி, ஸ்ரீக்கு வேலை வாங்கி தரும் "ஒரு மாதிரி" தோழியாக தேவி எனும் ரோஸி உள்ளிட்ட துணை, இணை நடிகர்கள் கூட பிரமாதம் போங்கள்... எனும் அளவு நடித்திருப்பது படத்தின் பெரியபலம்! இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நல்லவர் மாதிரி வாயாலேயே "வடை சுடும்" புதுமுகம் முத்துராமனும், ஸ்ரீயின் ரோட்டுகடை உதவியாளனாக காமெடி பண்ணும் சின்னசாமியும் சற்றே வறண்ட கதைக்களத்தை மறைத்து கலர்புல்லாக படத்தை பிரமாதமாக தூக்கி நிறுத்தி, வழக்கு எண் படத்திற்கு வெற்றி வாக்குளை சேர்க்கின்றனர். பேஷ்! பேஷ்!!

முதல்பாதி சற்று மெதுவாக நகர்வதும், படம்முழுக்க ஒருவித சோகம் பரவிக்கிடப்பதும் சற்றே டாக்குமெண்ட்ரி ‌எபெக்ட்டை கொடுத்தாலும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் அழகிய பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும், எஸ்.டி.விஜய் மில்டனின் வித்தியாசமான புதுவித ஒளிப்பதிவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்தாழமிக்க எழுத்தும்-இயக்கமும் மைனஸ் பாயண்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பிளஸ் பாயிண்டுகளை ‌நோக்கியே படத்தை இழுத்து சென்றிருப்பது, வழக்கு எண்ணை நம் வாழ்க்கையாக பிரதிபலிக்க செய்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் "வழக்கு எண் 18/9" , வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் என்றென்றும் வாழும் "நம்பர்-ஒன்!"

No comments:

Post a Comment